பூலோகத்து கற்பகதரு பனங்கற்கண்டு மருத்துவ பயன்கள் mooligai panakarkandu
வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை. இதனாலேயே கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரமான கற்பகதருவுக்கு ஒப்பிட்டு, பூலோகத்து கற்பகதரு என்றார்கள் நம் முன்னோர். பனை, குறைந்தது, 60 வருடங்களுக்கு மேல் வாழும். பனைநீரில் இருந்து பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருத்துவ குணம் உடையது.\
பாலில், பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால், மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலால் ஏற்படும் வெப்பம் இவற்றுக்கு நல்லது. பனை நீரிலுள்ள சீனி சத்து, உடலுக்கு தேவையான வெப்பத்தை தருகிறது.
இதிலிருக்கும் குளுக்கோஸ், மெலிந்து, தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி, நல்ல புஷ்டியை தருகிறது. வயிற்றுப் புண்ணை குணப்படுத்தி, ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.
இதிலிருக்கும் கால்சியம், பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு, பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து, பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன், கண் நோய், ஜலதோஷம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, எந்த கலப்படமும் இல்லாமல் இயற்கையாக கிடைக்கும் இனிப்பாகும். நாட்டு மருந்து தயாரிப்புக்கு கருப்பட்டி பயன்படுத்தப்படுகிறது. கருப்பட்டி, ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனிக்கு பளபளப்பை தரும்.
கரும்பு சர்க்கரைக்கு பதில், கருப்பட்டியை பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை, இதை சாப்பிடலாம். நமக்கு தேவையான கால்சியம், இதில் கிடைக்கிறது. சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு ஏற்றது. சுக்கு, மிளகு கலந்த கருப்பட்டியை, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால், பால் நன்றாக சுரக்கும். குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து கிடைக்கும்.
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர, கோடை காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும். பனங்கற்கண்டை அடிக்கடி பயன்படுத்தி வர, அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம், தாகம் போன்றவை நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர, சீதக்கழிச்சல் நீங்கும். பனங்கிழங்குக்கு, உடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. உடல் அழகும், பலமும் அதிகரிக்கும். பதனீர், உஷ்ணத்தை தடுக்க சிறந்த பானமாகும். தினமும் காலை, வெறும் வயிற்றில், 200 மில்லி அளவுக்கு பதனீர் குடித்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.