மணத்தக்காளி-manathakkali keerai payangal
மணத்தக்காளி கீரை, மூலிகை வகையை சேர்ந்தது. உணவாகவும், பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்கும்போது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.
மணத்தக்காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக்காளிக்கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன. கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது. மனதில் அமைதி இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும். எதைக் கண்டாலும் எரிச்சல் உண்டாகும்.
அத்தகைய நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனதுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மணத்தக்காளி கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் ஆகியவற்றை குணப்படுத்தும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.
மணத்தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். மலச்சிக்கல் பிரச்னையில் சிக்கித் தவிப்பவர்கள் இப்பழத்தைச் சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இதுவே, மலச்சிக்கலை குணமாக்குகிறது. நீர்க்கோவை நோய் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம்.
கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைவில் குணமாகும். ஒரு கைப்பிடி அளவு கீரையை சாறாக மாற்றி பிடித்த பழ ரசப் பானத்துடன் கீரைச் சாற்றையும் சேர்த்து அருந்தினால் வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும்.
இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். வயிறு சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாக இக்கீரையுடன் பாசிப் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம். இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது.
இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் களைப்பு நீங்கும். நிம்மதியான தூக்கம் வரும். மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. இதே சாறு, கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும், கல்லீரல் கோளாறுகளையும் குணமாக்க இக்கீரைச்சாறு பயன்படும். எல்லா வகையான காய்ச்சல்களையும் இக்கீரை தணிக்கும். உலர்ந்த மணத்தக்காளிக் கீரை அல்லது கீரைப் பொடி ஒரு தேக்கரண்டி தண்ணீரில் கொதிக்க வைத்து, உடனே வடிகட்டி, சூட்டுடன் அருந்த வேண்டும். இது உடனே செயல்பட்டு நோயாளியை நன்கு வியர்க்கச் செய்துவிடும். வியர்வை வெளியேறுவதால் காய்ச்சலின் தீவிரம் குறையும்.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com