குளியல் பொடி
அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளனர். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை.
இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.
உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம்
கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம்
கோரை கிழங்கு பொடி 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம்
இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும். இந்த மருத்துவ முறையை வராகமித்ரர் அங்கரசனைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.
இப்போது பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.
குளியல்பொடி தயாரிப்பது எப்படி?
மூலிகை பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
சோம்பு 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்
வெட்டி வேர் 200 கிராம்
அகில் கட்டை 200 கிராம்
சந்தனத் தூள் 300 கிராம்
கார்போக அரிசி 200 கிராம்
தும்மராஷ்டம் 200 கிராம்
விலாமிச்சை 200 கிராம்
கோரைக்கிழங்கு 200 கிராம்
கோஷ்டம் 200 கிராம்
ஏலரிசி 200 கிராம்
பாசிப்பயறு 500 கிராம்
இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com